அப்பொழுது ஒரு பெரிய காட்டில் இருப்பது போன்று அந்த மருத்துவமனை அறையே இருட்டாகிக்கொண்டே போகத்தொடங்கியது. இலைகளினூடாக காற்று வீசுவதை என்னால் கேட்க முடிந்தது, அதே சமயத்தில் அது தூரமான ஒரு பெரிய வனாந்திர வழியாய் இருப்பது போன்று தோன்றிற்று. காற்றானது இலைகளினூடாக வீசும் சத்தத்தையும், அது உங்களிடத்தில் நெருங்கி நெருங்கி வரும் ஓசையையும் நீங்கள் அநேகமாகக் கேட்டிருப்பீர்கள். அப்பொழுது நான், “மரணம் என்னைக் கொண்டு செல்ல வருகிறது” என்றே எண்ணிக்கொண்டேன், ஓ! என் ஆத்துமா தேவனை சந்திக்க வேண்டியதாயிருந்தது, நான் ஜெபிக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை.
அப்பொழுது காற்றானது மிகுந்த சத்தமாய் அருகில் வந்தது. உடனே இலைகள் கலகலவென்று சப்தம் எழுப்பின. நான் மரித்தவன் போலானேன்.
அதன்பின் அதே மரத்தின் கீழ் உள்ள பாதையில் நான் காலணியில்லாத ஒரு சிறு பையனாய் மீண்டும் நின்று கொண்டிருப்பது போன்று தென்பட்டது. அப்பொழுது மது அருந்தாதே, புகைப்பிடிக்காதே என்று கூறின அதே சத்தத்தை நான் கேட்டேன். அந்த நேரத்தில் அந்த நாளில் அந்த மரத்தில் காற்று வீசினபோது இலைகளில் உண்டான அதே சத்தத்தை நான் கேட்டேன்.
ஆனால் இந்த முறையோ அந்த சத்தம், நான் உன்னை அழைத்தேன். நீயோ வர மனதில்லாதிருக்கிறாய் என்றுரைத்தது. அதுவே மூன்று முறை திரும்ப திரும்ப உரைக்கப்பட்டது.
அப்பொழுது நான், கர்த்தாவே, அது நீராயிருந்தால், நான் பூமிக்கு திரும்பிச் சென்று, வீடுகளின் மேலும், வீதியின் மூலைகளிலும் நின்று உம்முடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன். நான் ஒவ்வொருவருக்கும் அதைக் குறித்துக் கூறுவேன் என்றேன்.
இந்த தரிசனம் கடந்துபோயிற்று. நான் எந்த விதத்திலும் மேலாக உணராததைக் கண்டேன். அறுவை சிகிச்சை செய்த என்னுடைய வைத்தியரோ இன்னமும் கட்டிடத்தில் தான் இருந்தார். அப்பொழுது அவர் வந்து என்னைப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டார். நான் மரித்துவிட்டதாக அவர் எண்ணியிருந்ததைப்போல அவர் என்னை நோக்கிப்பார்த்தார். அப்பொழுது அவர், நான் சபைக்கு செல்லுகிற ஒரு மனிதன் அல்ல, ஆனால் எனக்கு மிகப் பெரிய அனுபவம் உண்டு. எனவே தேவன் இந்தப் பையனை சந்தித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன் என்று கூறினார். அவர் ஏன் அதைக் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. வேறு யாருமே அதைக் குறித்து எந்தக் காரியத்தையும் கூறியிருக்கவில்லை. ஆனால் நான் இப்பொழுது அறிந்துள்ளதைப்போல அப்பொழுது அறிந்திருந்தேனேயானால், அப்பொழுது நான் அந்தப் படுக்கையிலிருந்து எழுந்து அவருடைய நாமத்தை சத்தமிட்டுக் கூறி துதித்திருப்பேன்.
பின்னர் ஒரு சில நாட்களில் நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். ஆயினும் சுகவீனமாகவே இருந்தேன். அப்பொழுது ஒரு தளப் பார்வையின் நிமித்தமாக நான் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானது. நான் எதையாவது ஒரு விநாடி உற்றுநோக்கிப் பார்க்கும்போது என் தலை ஆடினது.
நான் தேவனைத் தேடி கண்டறியத் துவங்கினேன். அப்பொழுது நான் பண்டைய மாதிரியிலான பீட அழைப்பு உள்ள இடம் எங்கேயாவது இருக்குமா என்று கண்டறிய முயற்சித்து சபை சபையாய் சென்றேன். ஆயினும் நான் அது போன்ற ஒன்றையும் கண்டறிய முடியவில்லை என்பதே அதன் சோகமான பாகமாகும்.
நான் எப்போதாவது ஒரு கிறிஸ்தவனாயிருக்க நேர்ந்தால் அப்பொழுது நான் உண்மையான ஒருவனாக இருப்பேன். அப்படி நான் கூறுவதைக் கேட்ட ஒரு ஊழியக்காரர், இப்பொழுது பையனே பில்லி, நீ மதவெறித்தனத்திற்குள் செல்லப் போகிறாய் என்ற கருத்தினைத் தெரிவித்தார். அப்பொழுது நான் எப்போதாவது ஒரு மார்க்கத்தைப் பெற்றுக்கொண்டால், அது கிரியை செய்யும்போது, சீஷர்கள் செய்ததைப் போன்று, நான் அதை உணர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினேன்.
ஓ, அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அதன்பின்னர் நான் அந்த மார்க்கத்தைப் பெற்று, அவருடைய ஒத்தாசையினால் நான் அதை இன்னும் உடையவனாயிருக்கிறேன். நான் எப்போதும் அதைக் காத்துக்கொள்வேன்.
ஒரு இரவு நான் தேவனுக்கான மிகுந்த பசிகொண்டவனாய், ஒரு உண்மையான அனுபவத்தைப் பெற நான் வீட்டிற்கு பின்னால் இருந்த ஒரு பழைய மரக்கொட்டிலுக்குச் சென்று, ஜெபிக்க முயன்றேன். ஆனால் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகையால் நான் எவரிடத்திலேனும் பேசுவதுபோல, அவரிடத்தில் பேசத் துவங்கினேன். அப்பொழுது திடீரென்று ஒரு ஒளி அந்த அறைக்குள்ளாக வந்து, ஒரு சிலுவையின் வடிவில் தோன்ற, அந்த சிலுவையிலிருந்து ஒரு சத்தம் நான் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாஷையில் பேசினது.பின்பு அது மறைந்துவிட்டது. நானோ செயலற்றுப் போயிருந்தேன். பின்பு நான் மீண்டும் சுயநினைவடைந்தபோது, கர்ததாவே, அது நீராயிருந்தால், தயவுகூர்ந்து மீண்டும் வந்து என்னிடத்தில் பேசும் என்று ஜெபித்தேன். நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தது முதற்கொண்டே என்னுடைய வேதாகமத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். அப்பொழுது நான் 1 யோவான் 4-ம் அதிகாரத்தில், பிரியமானவர்களே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தரியுங்கள் என்பதை வாசித்திருந்தேன்.
ஒரு ஆவி என்னிடத்தில் பிரசன்னமாயிருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் ஜெபித்தபடியால் அது மீண்டும் பிரசன்னமானது. அப்பொழுது என்னுடைய ஆத்துமாவிலிருந்து ஆயிரம் பவுண்டுகள் எடுக்கப்பட்டிருந்தது போன்று எனக்குத் தென்பட்டது. உடனே நான் குதித்தெழுந்து வீட்டிற்கு ஓடினேன். அப்பொழுது அது நான் ஆகாயத்தில் ஓடுவதுபோல தோன்றிற்று.
தாயாரோ, “பில், உனக்கு என்ன நேர்ந்துள்ளது?” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் நிச்சயமாகவே நல்ல உணர்வையும், பாரமற்று இலேசாக இருப்பதையும் உணருகிறேன்” என்று பதிலுரைத்தேன். அதன்பின்னர் என்னால் வீட்டில் தரித்திருக்க முடியவில்லை. எனவே நான் வெளிவந்து பயணஞ்செய்ய வேண்டியதாயிருந்தது.
நான் பிரசங்கிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினால், அப்பொழுது அவர் என்னைக் குணப்படுத்துவார் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆகையால் எண்ணெய் பூசி ஜெபிப்பதில் விசுவாசங்கொண்டிருந்த ஒரு சபைக்குச் சென்றேன், அப்பொழுது நான் உடனடியாக குணமாக்கப்பட்டேன். இன்றைய ஊழியக்காரர்கள் அநேகர் பெற்றிராத ஏதோ ஒரு காரியத்தை சீஷர்கள் அப்பொழுது பெற்றிருந்ததை நான் கண்டேன். சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர், எனவே அவர்களால் அவருடைய நாமத்தில் வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், வல்லமையான அற்புதங்களை செய்யவும் முடிந்தது. ஆகையால் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக ஜெபிக்கத் துவங்கி, அதைப் பெற்றுக்கொண்டேன்.
அதன்பின் ஏறக்குறைய ஆறு மாதத்திற்கு பின்னர் ஒரு நாள், தேவன் என்னுடைய இருதயத்தின் வாஞ்சையை எனக்கு அருளினார். அவர் ஒரு மகத்தான ஒளியில் என்னிடத்தில் பேசி, பிரசங்கிக்கவும், ஜெபிக்கவும் என்னைப் போகும்படிக் கூறி, அவர்களுக்கு உண்டாயிருக்கிற வியாதி என்னவாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் அவர்களை குணமாக்குவதாகக் கூறினார். அப்பொழுது நான் பிரசங்கிக்கவும், அவர் என்னிடத்தில் செய்யும்படிக் கூறினதைச் செய்யவும் தொடங்கினேன். ஓ, நண்பனே, சம்பவித்திருக்கிற எல்லாவற்றையும் என்னால் உங்களுக்குக் கூறத் துவங்க முடியாது. குருடரின் கண்கள் திறக்கப்பட்டன. முடவர் நடந்தனர், புற்று நோய்கள் குணமாக்கப்பட்டிருக்கின்றன மற்றும் எல்லாவிதமான அற்புதங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
நான் இந்தியானா, ஜெபர்ஸன்வில்லில் உள்ள ஸ்பிரிங் தெருவில் உள்ள ஆற்றில் இரண்டு வார எழுப்புதல் கூட்டத்திற்கு பிறகு, 130 நபர்களுக்கு ஞனாஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வெப்பமான ஆகஸ்ட் மாத தினமாய் இருந்தது. அப்பொழுது ஏறக்குறைய 3000 பேர் அங்கிருந்தனர். நான் கிட்டத்தட்ட பதினேழாவது நபருக்கு ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அமைதி நிலவ, ஒரு மெல்லிய சத்தம், “மேல் நோக்கிப்பார்” என்று உரைத்தது. அந்த வெப்பமான ஆகஸ்ட் மாத தினத்தில் ஆகாயமோ வெண்கலம் போல் காணப்பட்டது. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக எங்களுக்கு மழையே பெய்யாதிருந்தது. அப்பொழுது நான் மீண்டும் அந்த சத்தத்தைக் கேட்டேன், அதன்பின்னர் மூன்றாவது முறையாக அது, “மேல் நோக்கிப்பார்” என்று உரைத்தது.
உடனே நான் மேல்நோக்கிப்பார்த்தபோது, ஒரு பெரிய பிரகாசமான நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து வந்தது. நான் அதற்கு முன்பு அதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் நான் உங்களிடத்தில் அதைக் குறித்து கூறினதில்லை. அது பிரசன்னமானதைக் குறித்து அநேக முறை நான் ஜனங்களிடத்தில் கூறியிருக்கிறேன். அதற்கு அவர்களோ, “பில்லி, நீ வெறுமென அவ்வாறு அதனை கற்பனை செய்து கொண்டிருக்கிறாய். அல்லது நீ சொப்பனங்கண்டு கொண்டிருந்திருக்கலாம்” என்று கூறி நகைப்பர். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், இந்த முறையோ அவர் எல்லோரும் காணும்படியாக தன்னைக் காண்பித்திருந்தார், ஏனென்றால் நான் பேசக்கூட முடியாதபடிக்கு அது எனக்கு மிகவும் அருகில் வந்தது. ஒரு சில விநாடிகள் கடந்த பிறகு நான் கூச்சலிட்டேன். அப்பொழுது அந்த நட்சத்திரம் எனக்கு மேலே இருந்ததை அநேக ஜனங்கள் நோக்கிப்பார்த்தனர். சிலர் மயக்கமுற்றனர், மற்றும் சிலர் கூக்குரலிட்டனர், இன்னும் சிலர் ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னர் அந்த நட்சத்திரம் ஆகாயத்திற்கு திரும்பிச் சென்றது, அது சென்ற இடத்திலிருந்து சுமார் பதினைந்து அடி சதுரத்திற்கு தண்ணீர் அலைகள் புரளுவது போல் கிட்டத்தட்ட அந்த இடத்தில் தண்ணீரில் நுரையெழச் சுழன்று கலங்கினது. பின்னர் ஒரு வெண்மையான சிறு மேகம் உருவாகியது, அப்பொழுது இந்த நட்சத்திரம் இந்த சிறு மேகத்திற்குள்ளாக எடுக்கப்பட்டு மறைந்துபோனது.