யோவான் 5:28-29

இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.


நம்மில் ஒவ்வொருவரும் வரப்போகும் ஒரு நாளில், கிறிஸ்தவர்களாயிருந்தாலும் அல்லது மற்றவர்களாயிருந்தாலும், காலத்தின் திரைக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை சரியாக கண்டு கொள்வோம். வேதம் சிலருக்கு நித்திய ஜீவனை வாக்களிக்கிறது, மற்றவர்களுக்கு அது ஆக்கினைத்தீர்ப்பையே வாக்களிக்கிறது. சரித்திரத்தினூடாக வாழ்ந்து வந்துள்ள ஒவ்வொரு மானிடனும், “நான் மரிக்கும்போது எனக்கு என்ன சம்பவிக்கும்?” என்று நிச்சயமாகவே தனக்குதானே கேட்டுக்கொண்டு வந்திருக்கிறான்.

வாசிப்பதற்கு வேதாகமம் என்ற ஒன்று இருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தீர்க்கதரிசியாகிய யோபு இயற்கையைக் கவனித்துப் பார்த்தான். அவன் ஒரு மரத்தின் நம்பிக்கையை, அதாவது அது எப்படி வெட்டிப் போடப்பட்டு மரித்தாலும், அதே சமயத்தில் தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம் போலக் கிளைவிடும் என்பதைக் குறித்துப் பேசினான். யோபு ஒரு மனிதன் மரத்தைப் போலவே ஜீவனோடு மீண்டும் உயிர்த்தெழுவான் என்பதை அறிந்திருந்தான்:

மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.

இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். (யோபு 14:14-16)

யோபு வாசிக்க ஒரு வேதம் இல்லாமலிருந்திருக்கலாம், ஆனால் மானிட இனத்தின் மீட்பர் வரும்போது, தேவன் அவனை கல்லறையிலிருந்து உயிர்த்தெழச் செய்வார் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். (யோபு 19:23-26)

தீர்க்கதரிசி கர்த்தராகிய இயேசுவைக் குறித்தும், அவருடைய ஜனங்களின் உயிர்த்தெழுதலையுங் குறித்துமே பேசிக்கொண்டிருந்தார். நம்முடைய சரீரங்கள் முற்றிலும் அழிந்து போனாலும், இயேசு நம்முடைய மாம்சத்தை திரும்ப அளிப்பார் என்பதை வெளிப்பாட்டின் மூலம் யோபு அறிந்திருந்தான். நம்முடைய சொந்தக் கண்களினால் நாம் அவருடைய வருகையைக் காண்போம். எல்லா தேவனுடைய ஜனங்களுமே அந்த மகிமையின் நாளைக் காண வாஞ்சிக்கிறார்கள்.

எப்படியாயினும் தேவன் ஜீவிப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக பிசாசு என்ற ஒன்றும் கூட உண்டு. பரலோகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நரகமும் கூட உண்டு. அதன் பங்கீடுபாடுகள் நம்மால் யூகித்துப் பார்க்க முடிந்ததைக் காட்டிலும் உயர்ந்தவை. அப்போஸ்தலனாகிய பவுல், “எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” என்று கூறினான். (I கொரி. 2:9)

நம்முடைய சிந்தனைகள் பரலோகம் எவ்வளவு மகத்தானதாயிருக்கும் என்று புரிந்துகொள்ள முடியாதது போன்றே நரகத்தின் பயங்கரங்களையும் அவைகள் புரிந்துகொள்ளவே முடியாது. நரகம் மிகவும் மோசமாயிருக்கும் என்றும், அந்த பயங்கரமான ஸ்தலத்திற்கு துணிந்து செல்வதைப் பார்க்கிலும் நம்முடைய சரீரத்தின் அவயத்தில் ஒன்றை நாம் தரித்துப்போடுவது மேலாயிருக்கும் என்று இயேசு நமக்குக் கூறினார்.

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். (மாற்கு 9:43)

அப்படியானால் யார் பரலோகத்திற்கு செல்வார்? யார் நரகத்திற்கு செல்வார்? அது ஒரு வருத்தமான நினைவாயுள்ளது, ஆனால் அநேக ஜனங்கள் அவர் மனப்பூர்வமாய் அளிக்கும் பலனை பெற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று இயேசு கூறினார்: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13-14)

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" என்று இயேசுவும் கூட கூறினார். (மத்தேயு 7:21-23)

ஒரு நபர் கிறிஸ்தவ மார்க்கத்தை உரிமைக்கொண்டாடுகின்ற காரணத்தால் அவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை. ஆகையால் நம்முடைய சிந்தைகளில் உள்ள தெளிவானக் கேள்வி இதுவே; நாம் நித்திய ஜீவனை எப்படிப் பெற்றுக்கொள்கிறோம்? இயேசுவானவர் அதற்கான ஒரு பதிலை நமக்கு மிக எளிமையாக அளித்துவிட்டார்: என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)

சந்தேகத்திற்கிடமின்றி இன்றைய உலகில் வெகு சில ஜனங்கள் மாத்திரமே தங்களுடைய இடைவிடா பணி நேரங்களிலும் மனப்பூர்வமாய் தேவனுடைய வார்த்தையைக் கேட்க செலவிடுகிறார்கள். அதிலும் ஒரு சிலரே தாங்கள் ஒருமுறை கேட்ட வார்தையையுங்கூட விசுவாசிப்பார்கள்.

நாம் ஒரு நல்ல நபராக, உறுதியாக சிந்திக்க வேண்டும் என்றும், பொய்யுரைக்கவோ, ஏமாற்றவோ அல்லது களவாடவோக் கூடாது என்றும், அப்பொழுதே நாம் பரலோகத்திற்குச் செல்வோம் என்றும் சபைகள் கூறகின்றன. நரகமோ நல்ல வாழ்க்கைகளை வாழ்வதாய்த் தென்படும் ஜனங்களால் நிறைந்திருக்கும் என்பதை அவைகள் புரிந்துகொள்ளுகிறதில்லை. நாம் நம்முடைய நீதியான செய்கைகளின் நிமித்தமாகவோ அல்லது நாம் ஒரு குறிப்பிட்ட சபையின் அங்கத்தினராயிருக்கிற காரணத்தாலோ நாம் பரலோகம் சென்றுவிடமாட்டோம் என்பதே உண்மையாயுள்ளது. நித்திய ஜீவனுக்கு ஒரே ஒரு பாதை மாத்திரமே உண்டு, அது இயேசு கிறிஸ்து மூலமேயாகும். நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும் என்றும், அதுவே வேதம் என்றும் அவர் நமக்கு அறிவுறுத்தினார். மற்றபடி நாம் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?

உங்களுக்கான நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, நீங்கள், “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்பதைக் கேட்பீர்களா, (மத்தேயு 25:34) அல்லது நீங்கள், “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” (மத்தேயு 25:41) என்பதைக் கேட்கப் போகிறீர்களா?

இந்த வார்த்தைகளை உங்களுடைய கண்கள் வாசிக்கையில், நீங்கள் ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்ய வேண்டும். நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதைத் தெரிந்துகொள்வீர்களா?

நீங்கள் நித்தியத்தை எங்கே செலவழிப்பீர்கள்?







சான்றாதாரங்கள்

யோபு 14:12-16

மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.

நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.

மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.

இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.

யோபு 19:23-26

ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

மத்தேயு 7:21-23

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 22:14

அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

யோவான் 3:16-17

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

யோவான் 5:24

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

I கொரிந்தியர் 2:9

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

1 தெசலோனிக்கேயர் 4:13-18

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.