நம்முடைய ஊழியத்தைக் குறித்த சில பின்வரும் கேள்விகளை நாம் பெற்றுள்ளோம், இவைகளை வாசித்த பிறகு, உங்களுக்கு இந்த இணையதளத்தின் உள்ளடக்கத்தைக் குறித்த ஒரு கேள்வி இன்னமும் உண்டாயிருக்குமாயின், தயவுகூர்ந்து கீழ்காணும் இந்த மின் அஞ்சலில் கேட்டு அனுப்பவும். answers@themessage.com.

 

உங்களுடைய விசுவாசத்தின் வாக்குமூலம் என்ன?

எங்களுடைய "அதிகாரப் பூர்வமான" சபை உபதேசம் வேதாகமத்தில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ளதாயிருக்கும் என்றே நாங்கள் கூறுவோம். எங்களுடைய விசுவாச வாக்குமூலம் இந்தவிதமாக சுருக்கிக் கூறப்பட முடியம். கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடில்லை; அன்பைத் தவிர வேறு பிரமாணமில்லை; வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை.

நான் ஏற்கெனவே ஒரு கிறிஸ்தவன். இந்த இணையதளத்தில் உள்ள தகவல் உண்மையாகவே எனக்கு முக்கியத்துவமுடையதாயிருக்கிறதா?

ஆம்! கிறிஸ்தவர்கள் எல்லா தேவனுடைய வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும்; அந்தக் காரணத்தினால் தான் நாம் சபைக்குச் சென்று நம்முடைய வேதாகமங்களை வாசிக்கிறோம். இயேசு உங்களுடைய பாவங்களுக்காக மரித்தார் என்று கூறுகிற வேதபாகத்தை நீங்கள் விசுவாசிக்க மனதுடையவர்களாயிருந்து, அதே சமயத்தில் ஏதேன் தோட்டத்தில் பாவம் எப்படி துவங்கினது என்பதைக் குறித்து ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்?

நான் வாசித்திருக்கிறது சத்தியமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் எப்படி சேர்ந்துகொள்வது?

கிறிஸ்துவின் சரீரம் என்பது ஒரு வழிபாட்டு முறையோ அல்லது ஸ்தாபனமோ அல்ல. நீங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறீர்கள் என்பது மாத்திரமே உறுப்பினரின் தகுதியான தேவையாயுள்ளது. உங்களுடைய அடையாளச் சீட்டு, அல்லது சபை துரைத்தனத்தால் படிவங்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றைக் குறித்து கவலைகொள்ள வேண்டாம். வார்த்தையை விசுவாசியுங்கள், கர்த்தர் மற்ற எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்.

நீங்கள் ஒரு சபையா?

நாங்கள் ஒரு சபை ஸ்தாபனமல்ல, ஆனால் உலகத்தைச் சுற்றிலுமுள்ள ஆயிரக்கணக்கான சபைகளுக்கும், லட்சக்கணக்கான தனிப்பட்ட நபர்களுக்கும் ஆவிக்குரிய பக்திவிருத்திக்கேதுவான புத்தக மற்றும் ஒலித்தட்டுக்களை அவர்களுக்கு வழங்குவதின் மூலம் சேவை செய்கிறோம். எங்களுடைய ஊழியம் இப்புவியின் மீதுள்ள ஒவ்வொரு நபருக்கும் அவருடைய சுவிசேஷத்தை கிடைக்கச் செய்தவன் மூலம் ஜனங்களை கர்த்தராகிய இயேசுவண்டை நெருங்கிச் சேரும்படி உற்சாகப்படுத்துகிறதாயள்ளது.

நான் ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது அதைக் குறித்து என்ன?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்க நீங்கள் யாரையாகிலும் கண்டறிய முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய இடத்தின் முகவரியோடு எங்களுக்கு ஒரு மின் அஞ்சலை அனுப்புங்கள். அப்பொழுது உங்களுக்கு முறைப்படி ஞானஸ்நானங்கொடுக்கக் கூடிய உங்களுடைய பகுதியில் உள்ள சபைகளின் பெயர் பட்டியலை நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைப்போம். வேதத்தின்படி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டியது முக்கியம் என்பது நினைவிருக்கட்டும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல.

நான் ஒரு கத்தோலிக்கன் அல்லது மற்றொரு ஸ்தாபன அங்கத்தினனாயிருக்கிறபடியால், நான் இழக்கப்பட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கர்த்தராகிய இயேசு, "நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்" என்றார். இரட்சிப்பைக் குறித்து நியாயத்தீர்க்க எந்த ஒரு மனிதனுக்கும் அதிகாரம் கிடையாது. இயேசுவும் கூட, "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." என்று கூறினார். ஆகையால் நீங்கள் ஒரு கத்தோலிக்கராயிருந்தாலும், பாப்டிஸ்டாயிருந்தாலும், அல்லது பெந்தேகோஸ்தேகாரராயிருந்தாலும் கலைப்பட வேண்டியதில்லை; நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்.

வாய்ஸ் ஆஃப் காட் ரிகார்டிங்ஸ்( VGR) என்பது என்ன?

Voice of God Recordings,Inc, வாய்ஸ் ஆஃப் காட் ரிகார்டிங்ஸ் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் உதவிக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஸ்தாபன பாகுபாடற்ற ஊழியமாகும். நாங்கள் காலஞ் சென்ற சகோதரன் வில்லியம் மரியன் பிரான்ஹாம், ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியாக, சர்வதேச சுவிசேஷகராக அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட அவருடைய பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு செய்திகளையே புத்தக மற்றும் ஒலிதட்டு வடிவில் மூல ஆதாரமாக விநியோகிக்கிறோம். எங்களுடைய விநியோகங்கள் Mp3,Cds,DVDs என்ற ஒலிதட்டு வடிவிலும், ஒலி ஒளி வாயிலான தொலைக்காட்சிப் படங்கள், கணணி சம்மந்தமான உபகரணங்கள், புத்தகங்கள், நாளிதழ்கள், கைப்பிரதிகள், புகைப்படங்கள், செய்திமடல்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் சென்றடைகின்றன.

வில்லியம் பிரான்ஹாம் என்பவர் யார்? அவர் என்னோடு என்ன செய்ய வேண்டியவராயிருக்கிறார்?

சங்கை பிரான்ஹாம் என்பவர் ஏறக்குறைய 1947ம் வருடத்திலிருந்து 1965ம் வருடம் வரை உலகப் புகழ்பெற்ற சுவிசேஷகராக ஊழியக் களத்தில் இருந்த ஒருவர் ஆவார். அவர் இலட்சக்கணக்கானவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்பது மாத்திரமல்ல, தேவன் அவருடைய ஊழியத்தை கணக்கற்ற அற்பதங்களினால் ரூபகாரப்படுத்தினார். இந்த இணையதள இணைப்பு அவருடைய ஊழியத்தின் அறிமுகத்தை உங்களுக்கு அளிக்கும்.

இந்த அற்புதங்கள் யாவும் உண்மையாகவே நிகழ்ந்திருந்தால், நான் எப்படி அவரைக் குறித்து ஒருபோதும் கேள்விப்படாமலிருந்து வந்துள்ளேன்?

அது ஒரு நல்ல கேள்வி. அந்த ஒன்றைத்தான் நாங்கள் இன்றைய எல்லா முக்கிய சபைகளையும் கேட்க விரும்புகிறோம். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். ஏன் அதைக் குறித்து ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கவில்லை? அவர்கள் பேச வேண்டும்.

நீங்கள் ஏன் வில்லியம் பிரான்ஹாம் என்பவருக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?

யோசுவா மோசேக்கு மிக அதிக முக்கியத்துவத்தை அளித்ததும் அதே காரணத்திற்காகத்தான். அதாவது மோசே தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வந்த ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். சகோதரன் பிரான்ஹாம் அவர்களும் அதேக் காரியத்தைச் செய்தார்.

உங்களுடைய ஊழியத்தோடு சம்பந்தப்பட்டுள்ள ஸ்திரீகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோருமே ஏன் நீண்ட கூந்தலைக் கொண்டவர்களாய், நீண்ட பாவாடைகளை அணிந்திருக்கிறார்கள்?

பவுல் 1 கொரிந்தியர் 11:15-ல் "ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே" என்று கூறினார். பவுல் "ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்....." என்று கூட கூறினார். மோசேயும், "புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது" என்று கூறினார். வேதம் அதைக் கூறுகிறதென்றால், அப்பொழுது உண்மையான கிறிஸ்தவர்கள் அதை விசுவாசிப்பார்கள்.

நான் சில ஆராய்ச்சி செய்தபோது, சங்கை பிரான்ஹாம் அவர்கள் கூறின காரியங்களை தவறு என்று சுட்டிக்காட்ட அர்ப்பணிக்கப்பட்டுள்ள சில இணைய தளங்களைக் கண்டேன். நீங்கள் எப்படி அவைகளுக்கு பதிலளிக்கிறீர்கள்?

எந்தக் காரியமாயினும் ஒவ்வொரு காரியத்தையும், வேதாகமத்தையுங்கூட சேர்த்து தவறு என்று சுட்டிக்காட்ட அர்ப்பணிக்கப்பட்டுள்ள இணையதளங்களை நீங்கள் கண்டறிவீர்கள். எனவே இணையதளத்தில் எளிதாக கண்டறியக் கூடிய சொல்வன்மையைக் கொண்டில்லாமல், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நாங்கள் உங்களுக்கு அளித்துள்ள செய்தியை நீங்கள் நிதானித்துப் பாருங்கள் என்று நாங்கள் எளிமையோடு கேட்டுக்கொள்கிறோம். கர்த்தராகிய இயேசுவைப் பற்றி ஒருபோதும் இனிமேல் அவதூறாய் பேசவேக்கூடாது என்பது நினைவிருக்கட்டும். நீங்கள் சரியான ஒரு காரியத்தை செய்து கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் விமரிசனத்தை எதிர்பார்க்க முடியும்.

எல்லா ஸ்தாபனங்களுமே என்னிடத்திலிருந்து பணத்தை கேட்டுப் பெற்றக்கொள்கின்றன. அது எப்பொழுதும் பணத்தை குறித்ததாகவே உள்ளது.

நன்கொடை கேட்டு பெறும்படியாக எந்த ஒரு இடமும் இந்த இணையதளத்தில் ஒதுக்கப்படவில்லையென்பதை கவனிக்கவும். பணத்திற்காக நாங்கள் மன்றாடி கேட்க வேண்டிய நேரம் வரும்போது, அப்பொழுது இந்த ஊழியத்திற்கான முடிவு வந்துவிட்டது. இது பணத்தைக் குறித்ததல்ல. இது இயேசு கிறிஸ்துவிற்கு ஆத்துமாக்களை ஆயத்தபண்ணுகிறதைக் குறித்ததாயுள்ளது.

நான் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்; எனவே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

வேதம், "விசுவாசம் கேட்பதனால் வரும்" என்று கூறுகிறது. ஆகையால் நீங்கள் தொடர்ந்து செவிகொடுத்து கேட்கும்படிக்கு நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படியான ஒலிப்பதிவு செய்யப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட செய்திகள் எங்களிடத்தில் உண்டு. மிண்ணணு கோப்புக்களிலிருந்து பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு பிரச்சனையாயிருக்குமாயின், அப்பொழுது எங்களால் அவைகளை உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்க முடியும்.


www.branham.org அனுதினம் எங்கள் ஊழியத்துடன் சம்மந்தப்பட்ட செய்திகளையும், சாட்சிகளையும் விபரமாக அளிக்கிறது. எனவே உலகத்தை சுற்றிலுமுள்ள விசுவாசிகளிடத்திலிருந்து எங்களுடைய இணையதளத்தை பார்வையிட நாங்கள் உங்களை அழைக்கிறோம். இந்த நவநாகரீக காலத்தில் எத்தனை மகத்தான காரியங்களை கர்த்தராகிய இயேசு இப்பொழுது செய்து கொண்டு வருகிறார் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.