வேதாகமத்தில் தேவன் எப்பொழுதுமே தம்முடைய செய்தியை உலகத்தின் ஜனங்களுக்கு காலத்தின் தீர்க்கதரிசியின் மூலமாகவே கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு எரிகிற முட்செடியினூடாக மோசேயினிடத்தில் பேசி, எபிரெயப் பிள்ளைகளை எகிப்திலிருந்து வழிநடத்திச் செல்லும்படியான கட்டளையை அவனுக்கு அளித்தார். அவனுடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்த காணக்கூடிய அக்கினி ஸ்தம்பமும், இன்னும் மற்ற அடையாளங்களும் அளிக்கப்பட்டிருந்தன. யோவான்ஸ்நானன் வரவிருந்த மேசியாவிற்காக உலகத்தை ஆயத்தம்பண்ணுகிற ஒரு செய்தியைக் கொண்டு வந்தான். கர்த்தராகிய இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம்பண்ணப்படுகையில், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, தேவ ஆட்டுக்குட்டியானவரை அறிமுகப்படுத்தும்படியான யோவானுடைய ஊழியத்தை உறுதிபடுத்தினது. சில வருடங்களுக்குப் பின்னர் அவர் ஒரு குருடாக்கும் ஒளியினூடாக பவுலினிடத்தில் பேசி, சபைகளை ஒழுங்குபடுத்தும்படியான கட்டளையை அவனுக்கு அளித்தபோது, கர்த்தருடைய சத்தம் மீண்டும் ஒரு தீர்க்கதரிசியினிடத்தில் பேசுவதைக் கேட்டனர். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளினூடாக முழுவதுமே தேவன் ஒருபோதும் ஒரு ஸ்தாபன முறைமையினூடாகவோ அல்லது ஒரு மத சம்பந்தமான ஸ்தாபனத்தினூடாகவோ தம்முடைய ஜனங்களிடத்தில் பேசினதேயில்லை. அவர் எப்பொழுதுமே ஒரு மனிதன் மூலமாகவே ஜனங்களிடத்தில் பேசி வந்துள்ளார்; அது அவருடைய தீர்க்கதரிசியே. அவர் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களினூடாக இந்த தீர்க்கதரிசிகளை ரூபகாரப்படுத்தினார்.
ஆனால் இன்றைக்கு அதைக் குறித்து என்ன? தேவன் இன்னமும் தம்முடைய வார்த்தையை தீர்க்கதரிசிகளிடத்தில் வெளிப்படுத்துகிறாரா? இந்த நவநாகரீக காலத்தில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை உலகத்திற்கு அனுப்புவாரா? பதிலோ மிகத் தெளிவான ஒன்றாயுள்ளது, “ஆம்!”
ஆனால் ஒரு தீர்க்கதரிசி எழும்பும்போது, நாம் எப்படி அதை அறிந்து கொள்வோம்? அவர் எப்படி காணப்படுவார்? அவர் எப்படி செயல்படுவார்? அவர் நமக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பார்? எந்த வேதவாக்கியங்களை அவர் நிறைவேற்றுவார்?
பண்டைய தீர்க்கதரிசிகள் தீரமான தேவ மனிதர்களாயிருந்து, மார்க்க ரீதியான ஸ்தாபனங்களுக்கு எதிர்த்து நிற்க பயப்படாமலிருந்தனர். உண்மையாகவே அவர்கள் சபை குருமார்களால் எப்போதுமே கிட்டத்தட்ட வசைபாடப்பட்டனர். எலியா தன்னுடைய நாளில் இருந்த மார்க்க ரீதியான ஸ்தாபனங்களிடத்தில் தேவன் தன்னுடைய பலியை அங்கீகரிப்பாரா அல்லது அவர்களுடைய பலியை அங்கீகரிப்பாரா என்று பார்க்கலாம் என்று கூறி சவாலிட்டான். அப்பொழுது அவர்களோ சத்தமிட்டனர். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் பலிபீடத்தின் மேலேறிக் குதித்தனர். அவர்கள் கத்திகளைக் கொண்டு தங்களை வெட்டிக்கொண்டனர். ஆனால் தேவன் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை. அதன் பின்னர் எலியா வானத்தை அண்ணாந்து பார்த்து, “நீர் இஸ்ரவேலில் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், உம்முடைய வார்த்தையின்படியே இந்தக் காரியங்களையெல்லாம் நான் செய்திருக்கிறேன் என்பதும் இந்த நாளில் அறியப்படுவதாக” என்றான்.
பின்னர் அவன் பலியை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தான். பிராதான ஆசாரியனாகிய சிதேக்கியா ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாக உரைத்ததற்காக மிகாயா அவனைக் கடிந்துகொண்டபோது, அவன் இஸ்ரவேலின் இராஜாவையும், முழு ஆசாரியத்துவத்தையுமே எதிர்த்து நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியன் மிகாயாவை கன்னத்தில் அறைய, இராஜாவோ இவன் சத்தியத்தை உரைத்ததற்காக சிறையில் அடைத்தான். கர்த்தராகிய இயேசுவும் கூட தம்முடைய நாளிலிருந்த மார்க்க சம்மந்தமான ஸ்தாபனங்களால் அதிகமாய் வெறுக்கப்பட்டார். அவர்களோ இவரை இழிவான குற்றவாளிகளுக்கு நடுவில் சிலுவையிலறைந்தனர். சரித்திரமானது உண்மையை நிலைத்திருக்கச் செய்யுமேயானால், ஒரு தீர்க்கதரிசி நவநாகரீக ஸ்தாபன முறைமையினால் வெறுக்கப்படுவான். அவன் ஒரு சமய முறைமைகளுக்கு எதிரானவன், கள்ள தீர்க்கதரிசி அல்லது இன்னும் மோசமாக முத்திரையிடப்படுவான். ஆனால் தேவன் தம்முடைய ஊழியக்காரன் மூலம் நிலைநிற்பார்.
இந்த நவீன காலத்தில் ஒரு தீர்க்கதரிசி இருந்திருந்தால், எப்படி அவன் கத்தோலிக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்படுவான்? பாப்டிஸ்டு சபையினால் ஏற்றுக்கொள்ளப்படுவானா? லுத்தரன் சபையினால் ஏற்றுக்கொள்ளப்படுவானா? வேறேந்த ஸ்தாபனத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்படுவானா?
கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் கட்டளையிட்டதாவது; “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.” (மாற்கு 16:17-18). இன்றைக்கு இந்த வேதவாக்கியங்கள் உண்மையாய் இருக்கின்றனவா? இது உண்மையாயில்லையென்றால் எப்பொழுது கர்த்தருடைய வார்த்தைகள் காலாவதியாகிப்போயின? வேதம் முழுவதிலுமே தீர்க்கதரிசிகள் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்களாகவே இருந்து வந்தனர். மோசே கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் கடியிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை குணப்படுத்த அவர்களுக்கு முன்பாக ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்துவைத்தான். (எண். 21:9) சீரியாவில் பராக்கிரமசாலியாயிருந்த நாகமான் குஷ்டரோகத்திலிருந்து குணமாக்கப்பட எலிசாவினிடத்திற்கு வந்தான் ( II இராஜா 5:9) ஒரு வாலிபன் மேல் அறையிலுள்ள ஜன்னலிலிருந்து விழுந்து மரித்துப்போனபோது, அப்போஸ்தலனாகிய பவுல் அவனை அணைத்துக்கொண்டபோது, அவனுடைய ஜீவன் மரித்துப்போன சரீரத்திற்குள்ளாக திரும்ப வந்தது. (அப்போ. 20:10). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவியத்தில் ஏறக்குறைய 3½ வருடங்களுக்கு மாத்திரமே நம்மிடத்தில் ஆதாரச் சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த சில வருடங்களில் அவர் தொடர்ந்து வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். குருடர் பார்வையடைந்தனர். குஷ்டரோகிகள் சொஸ்தமாக்கப்பட்டனர். செவிடர் கேட்டனர். சப்பாணிகள் நடந்தனர். சகலவிதமான வியாதிகளும் சொஸ்தமாக்கப்பட்டன. (மத்தேயு 4:23).
சுகமளித்தல்களைத் தவிர இன்னும் மற்ற வழிகளிலும் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை ரூபகாரப்படுத்தினார். இருதயத்தின் அந்தரங்க இரகசியங்கள் இந்த தேவ மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு சொப்பனங்கண்டு தொல்லைக்குள்ளாகி கலங்கிக்கொண்டிருந்தான், ஆனாலும் அவனால் அது எதைக் குறித்தது என்று நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. தீர்க்கதரிசி தானியேல் அந்த சொப்பனத்தையும், அதனைப் பின்தொடர்ந்த தீர்க்கதரிசனத்தையும் இராஜாவுக்கு கூறினான். (தானி. 2:28). சேபாவின் ராஜஸ்திரீ சாலமோனுக்கு முன்பாக வந்தபோது, அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு ஒன்றாகிலும் அவனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. அவன் ஆவியினால் நிரப்பப்பட்டு, அவள் அந்த கேள்விகளை அவனிடத்தில் கேட்பதற்கு முன்பாகவே அவளுடைய இருதயத்தின் கேள்விகளையெல்லாம் அவளிடத்தில் அவன் கூறினான். ( I இராஜாக்கள் 10:3). எலிசா இஸ்ரவேலின் இராஜாவுக்கு சீரியா இராஜாவின் எல்லாத் திட்டங்களையும் மற்றும் அவனுடைய பள்ளி அறையிலே பேசப்பட்ட தனிப்பட்ட வார்த்தைகளையுங் கூட அறிவித்தான். (II இராஜாக்கள் 6:12).
அவருடைய சொந்த செய்கைகளினூடாக கர்த்தராகிய இயேசு இந்த பகுத்தறிதலின் ஆவி கிறிஸ்துவின் ஆவி என்பதை அவ்வப்போது காண்பித்தார். அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று நாத்தான்வேலைப் பார்த்துக் கூறினபோது, அவர் அவனுடைய சுபாவத்தைப் பகுத்தறிந்தார். பிலிப்பு மேசியாவைக் குறித்து நாத்தான்வேலினிடத்தில் கூறினபோது, நாத்தான்வேல் எங்கிருந்தான் என்பதையும் இயேசுவானவர் அவனிடத்தில் கூறினார். (யோவான் 1:48). இயேசு நாத்தான்வேலினுடைய இருதயத்தை அறிந்திருந்தார் என்பதை அவன் கண்டபோது, அவன் உடனே அவரை கிறிஸ்துவாக அடையாளங்கண்டு கொண்டான். இயேசு முதன் முறையாக பேதுருவைக் கண்டபோது, அவர் அவனுடைய தகப்பனாரின் பெயர் யோனா என்று அவனிடத்தில் கூறினார். (யோவான் 1:42). அப்பொழுது பேதுரு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடைய எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் பின்பற்றினான். இயேசு சமாரிய ஸ்திரீயை கிணற்றண்டையிலே சந்தித்தபோது, அவளுடைய கடந்தகால பாவங்களை அவளிடத்தில் கூறினார். (யோவான் 4:19). இந்த மூவரும் வித்தியாசப்பட்ட வாழ்க்கை முறையிலிருந்தனர். அதேசமயத்தில் அவர் பகுத்தறிதலின் வார்த்தையைக் காண்பித்தபோது, அவர்கள் உடனடியாக இயேசுவை அடையாளங்கண்டு கொண்டனர்.
வேதாகமத்தின் கடைசிப் பக்கம் எழுதப்பட்டபோது, இந்த வரம் மறைந்துபோனதா? இந்த அற்புதங்கள் மிகத் தெளிவாக வேதத்தில் எழுதப்பட்டிருந்தால், இன்றைக்கு அவைகள் எங்கே? ஒரு நவீன கால தீர்க்கதரிசி நிச்சயமாகவே அற்புதங்களினால் ரூபகாரப்படுத்தப்படுவான்.
அவர் தம்முடைய ஜனங்களை மறந்துவிட்டாரா? அவரால் இன்னமும் வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியுமா? அவர் இன்னமும் தம்முடைய தீர்க்கதரிசிகளினூடாக நம்மிடத்தில் பேசுகிறாரா? தீர்க்கதரிசிகளில் எவரேனும் இந்த நாளை முன்னறிந்திருந்தார்களா?
இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்க்கதரிசனங்கள் உள்ளனவா?