ஒருநாள் அந்த அழைப்பிலிருந்து விலகும்படியான ஒரு வழியை கண்டறிய நான் தீர்மானித்தேன். அப்பொழுது நான் ஒரு பண்ணையில் பணிபுரிய மேற்கு நோக்கி சென்றுகொண்டிருந்தேன். நண்பனே, தேவன் எந்த இடத்திலும் இருப்பது போன்று அங்கும் அவ்வளவு மகத்தானவராயிருக்கிறார். என்னுடைய அனுபவத்தின் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகலாம். அவர் உங்களை அழைக்கும்போது, அவருக்கு மறு உத்தரவு கொடுங்கள்.
1927-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஒரு நாள் காலையில் ஜெபர்ஸன்வில்லிலிருந்து ஏறக்குறைய பதினாலு மைல்கள் தொலைவில் இருந்த டியூனல் மில் (Tunnel Mill) என்ற இடத்திற்கு பயணமாகச் செல்லப்போவதாக நான் என் தாயாரிடம் கூறினேன். அந்த நேரத்தில் நாங்கள் அங்கே வசித்து வந்தோம். ஆனால் நான் சில நண்பர்களோடு அரிசோனாவிற்கு பயணம் செல்ல ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். தாயார் என்னைக் குறித்து மீண்டும் கேள்விப்பட்டபோது, நான் டியூனல் மில் என்ற இடத்தில் அப்பொழுது இல்லாமல், தேவனுடைய அன்பிலிருந்து விலகியோடி அரிசோனாவில் உள்ள பீனிக்ஸில் இருந்தேன். பண்ணை வாழ்க்கை கொஞ்ச காலத்திற்கு மிக நன்றாக இருந்தது. ஆயினும் அது சீக்கிரத்தில் மற்ற உலக இன்பங்களைப் போன்று பழையதாகிப் போனது. ஆனால் நான் இங்கே கூறுவதென்னவெனில், தேவனுக்கு ஸ்தோத்திரம், இயேசுவோடு இனிமையாய், இனிமையாய் எல்லா நேரத்திலும் வளருகின்ற அனுபவமோ ஒருபோதும் பழையதாய் போகிறதில்லை. இயேசு பரிபூரண சமாதானத்தையும், ஆறுதலையும் எப்பொழுதும் அளிக்கிறார்.
அநேகமுறை காற்று உயரமான தேவதாரு மரங்களினூடாக வீசுவதைக் கேட்டிருக்கிறேன். அது அவருடைய சத்தம் காட்டிலிருந்து, “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கூப்பிடுவதைக் கேட்பது போன்றே தென்பட்டது. நட்சத்திரங்களோ உங்களுடைய கரங்களில் அவைகளைத் தொடும்படிக்கு அவ்வளவு அருகாமையில் இருப்பது போன்று தென்பட்டது. தேவன் அவ்வளவு அருகாமையில் இருப்பது போன்றே தென்பட்டது.
ஒரு காரியமென்னவென்றால் ஏறக்குறை அந்த தேசம் வனாந்திரத்தில் உள்ள பாதைகளில் உள்ளது. நீங்கள் அந்தப் பாதையை விட்டு விலகிச் செல்வீர்களேயானால், அப்பொழுது நீங்கள் மிக எளிதாக திசைக்கெட்டுப்போய் தொலைந்துவிடுவீர்கள். அநேகமுறை சுற்றுலாவினர் சிறு வனாந்திர மலர்களைப் பார்த்து, அவைகளைப் பறிக்கத் தூரத்திலுள்ள வனாந்திரப் பெரும்பாதைக்குச் செல்வர். அப்பொழுது வனாந்திரத்திலே அலைந்து திரிந்து, தொலைந்து போய்விடுவர், சில நேரத்தில் தாகத்தால் மடிவர். ஆகையால் இதுவே கிறிஸ்தவனின் வழியிலும் உள்ளது. தேவன் ஒரு பெரும்பாதையை அமைத்துள்ளார். அவர் அதைக் குறித்து ஏசாயா 35-ம் அதிகாரத்தில் பேசுகிறார். அது பரிசுத்தத்தின் பெரும்பாதை என்றழைக்கப்படுகிறது. அநேக சமயங்களில் இவ்வுலகத்தின் சிற்றின்பங்கள் உங்களை அந்தப் பெரும்பாதையிலிருந்து இழுத்துக்கொள்கின்றன. அப்பொழுது நீங்கள் தேவனோடு உள்ள உங்களுடைய அனுபவத்தை இழந்துபோகின்றீர்கள். வனாந்திரத்திலே நீங்கள் அலைந்து திரியும்போது, சிலநேரங்களில் கானல் நீர் தோன்றும். தாகத்தால் மடிகின்ற ஜனங்களுக்கோ கானல் நீரானது ஒரு நதியைப் போன்று அல்லது ஒரு ஏரியைப் போன்றேக் காணப்படும். அநேகமுறை ஜனங்கள் அவைகளை நாடி ஓடிச் சென்று, அவைகளில் விழுந்து, அவை வெறும் சுடு மணல் என்று கண்டறிவர். சில நேரங்களில் பிசாசு உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைக் காட்டுகிறான். அது ஒரு நல்ல நேரம் என்றும் அவன் கூறுகிறான். ஆனால் அதுவோ வெறுமென ஒரு கானல் நீரைப் போன்றதேயாகும். நீங்கள் அதற்கு செவிகொடுத்தால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய தலைக்கு மேல் வருத்தத்தை மாத்திரமே குவித்துக்கொள்வதைக் கண்டறிவீர்கள். அன்புள்ள வாசகரே, அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம். பசியாயும் தாகமாயுமிருப்பவருக்கு ஜீவத் தண்ணீரைத் தருகிற இயேசுவையே விசுவாசியுங்கள்.
ஒரு நாள் என்னுடைய சகோதரர்களில் ஒருவன் மிகவும் சுகவீனமாயிருக்கிறான் என்று எனக்குக் கூறுகிற ஒரு கடிதத்தை நான் வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டேன். அது எனக்கு அடுத்து பிறந்த சகோதரன் எட்வர்ட். ஆனால் நானோ உண்மையாகவே அவன் மிக மோசமான நிலையில் இல்லை என்று எண்ணிக் கொண்டேன். ஆகவே அவன் குணமாகிவிடுவான் என்று நம்பினேன். ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் ஒரு நாள் மாலை வேளையில் நான் பண்ணையிலே உணவு அருந்தும் இடத்தைக் கடந்து பட்டணத்திலிருந்து வந்துகொண்டிருந்தபோது, மேஜையின் மீது ஒரு துண்டு காகிதத்தைக் கண்டேன். அப்பொழுது நான் அதை எடுத்துக்கொண்டேன். அதில், “பில், வடபாகத்து மேய்ச்சல் வெளியண்டைக்கு வா, மிக முக்கியம்” என்று எழுதியிருந்ததை வாசித்தேன். நான் ஒரு நண்பனிடத்திலிருந்து எழுதப்பட்டிருந்த அந்த குறிப்பைப் படித்த பிறகு, நான் மேய்ச்சல் வெளியண்டைக்கு நடந்து வந்தேன். அப்பொழுது நான் சந்தித்த முதல் நபர் பண்ணையில் பணிபுரிந்திருந்த வயோதிக லோன் ஸ்டார் பண்ணை மேற்பார்வையாளராவார். அவருடைய பெயர் டர்பை (Durfy), ஆனால் அவரை “பாப்” (Pop) என்றே அழைத்து வந்தோம். அவர் முகவாடலாக இருந்துகொண்டு, பையனே பில்லி, நான் உனக்கு துக்கமான செய்தியை கூறவிருக்கிறேன்” என்றார். அந்த நேரத்தில் முறைகாண் ஆயுத முகவர் (Foreman) நடந்து வந்தார். அப்பொழுது அவர்கள் என்னுடைய சகோதரனுடைய மரணத்தைக் குறித்து என்னிடத்தில் கூறும்படி சற்று முன்புதான் தந்தி வந்தது என்று கூறினர்.
அருமை நண்பனே, ஒரு விநாடி என்னால் அசைய முடியாமற்போயிற்று. அதுவே எங்களுடைய குடும்பத்தில் நிகழ்ந்த முதல் மரணம். ஆனால் அப்பொழுது அவன் மரிக்க ஆயத்தமாயிருந்தானா என்று நான் நினைத்த முதல் காரியத்தையே கூற விரும்புகிறேன். அப்பொழுது நான் திரும்பி மஞ்சள் நிற பரந்த புல்வெளியை நோக்கிப் பார்த்தபோது, கண்ணீர் என் கன்னங்களில் வடிந்தோடினது. நாங்கள் சிறுவர்களாயிருந்தபோது எப்படி நாங்கள் சேர்ந்து போராடினோம் என்றும், அது எங்களுக்கு எவ்வளவு கடினமானதாயிருந்தது என்றும் எப்படியாய் நினைவு கூர்ந்தேன்.
நாங்கள் புசிக்க ஒன்றுமில்லாமல் பள்ளிக்குச் சென்றோம். எங்களுடைய கால்களின் நுனிவிரல்கள் கிழிந்த காலணிகளுக்கு வெளியில் தெரியும்படி நீட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பழைய கிழிந்த கோட்டுகளைத் தைத்து கழுத்துவரை அணிந்திருப்போம், ஏனென்றால் எங்களுக்கு அணிந்து கொள்ள சட்டையே இல்லாதிருந்தது. ஒரு நாள் தாயார் எங்களுடைய மதிய ஆகாரத்திற்கு ஒரு சிறு வாளியில் மக்காச் சோளப் பொரியை கொடுத்தனுப்பியதை எப்படியாய் நான் நினைவுகூர்ந்தேன். நாங்கள் அதனை மற்ற பிள்ளைகளோடு அமர்ந்து சாப்பிடவில்லை. அவர்கள் வைத்திருந்த ஆகாரத்தைப் போன்ற ஆகாரத்தை எங்களால் வாங்க முடியவில்லை. எனவே எப்பொழுதுமே மலைப்பக்கமாக நழுவிச் சென்று உண்போம். நாங்கள் மக்காச்சோளப் பொறியை வைத்திருந்த அந்த நாளை நான் நினைவுகூர்ந்தேன். அது ஒரு நல்ல உண்மையான இன்ப விருந்து என்றே அதைக் குறித்து நாங்கள் எண்ணிக்கொண்டோம். ஆகவே நான் மதிய உணவு வேளை வரும்முன்னே வெளியே சென்று என்னுடைய பங்கையும், என்னுடைய சகோதரன் அவனுடைய பங்கை எடுத்துக்கொள்வதற்கு முன்னமே அதிலிருந்தும் ஒரு கைப்பிடி நிறைய அள்ளி எடுத்துக் கொண்டேன்.
அப்பொழுது அங்கு நின்று, தேவன் அவனை மேலான ஸ்தலத்திற்கு அழைத்துக்கொண்டாரா என வியப்புற்று, அந்த காரியங்கள் எல்லாவற்றையுங் குறித்து எண்ணியவனாய் மரங்களற்ற புல்வெளியை வாட்டியெடுத்துக் கொண்டிருந்த சூரியனை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் மீண்டும் தேவன் என்னை அழைத்தார். ஆனால் அதுவோ வழக்கத்திற்கு மாறானதாயிருந்தபடியால், நான் அதிலிருந்து போராடி விடுபட முயன்றேன்.
அதன்பின்பு நான் அடக்க ஆராதனைக்காக வீட்டிற்கு வர ஆயத்தமானேன். அப்பொழுது போர்ட் புளுடன் சபையின் போதகர் சங்கை. மிக்கினி (McKinny), அவர் எனக்கு ஒரு தகப்பனைப் போன்றிருந்த ஒரு மனிதன், அவர் அவனுடைய அடக்க ஆராதனையில் பிரசங்கித்தபோது, “இங்கே சிலர் இன்னமும் தேவனை அறியாமலிருக்கலாம், அப்படியிருந்தால் இப்பொழுது அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுக் கூறினார். ஓ, அப்பொழுது நான் எப்படியாய் என்னுடைய இருக்கையை இறுகப் பற்றிக்கொள்ள, தேவனோ மீண்டுமாய் என்னிடத்தில் தொர்புகொள்ள தொடங்கினார். அருமை வாசகரே, அவர் அழைக்கும்போது, அவருக்கு பதிலளியுங்கள்.
அந்த அடக்க ஆராதனைக்குப் பிறகு என்னுடைய ஏழையான தாயும் தகப்பனும் எப்படிக் கதறி அழுதனர் என்பதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் மீண்டும் மேற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றிருந்தேன். ஆனால் தாயாரோ இங்கே தங்கியிருக்கும்படி கெஞ்சினார். அப்பொழுது என்னால் ஏதாவது பணியைத் தேடிக்கொள்ள முடியுமா என்று எண்ணி முடிவிலே இங்கேயே தங்கியிருக்க ஒப்புக்கொண்டேன். அதன்பின் உடனடியாக இந்தியானா பொது சேவை நிர்வாகத்தில் எனக்கு ஒரு பணி கிடைத்தது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நியூ ஆல்பனியில் உள்ள எரிவாயு பணியில் இருந்தபோது அந்தக் கடையில் இருந்து மின் அளவு காட்டும் கருவியை பரிசோதிக்கையில், நான் எரிவாயுப் புகையினால் தாக்கப்பட்டு பல வாரங்களாக அவதியுற்றேன். எனக்குத் தெரிந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்றேன். நான் எந்த நிவாரணமும் பெற முடியவில்லை. எனக்கு எரிவாயுவின் பாதிப்பின் காரணமாக வயிற்றில் அமில பாதிப்பு ஏற்பட்டு அவதியுற்றேன். அது நாளுக்கு நாள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் கென்டக்கியில் உள்ள லூயிவில் என்ற இடத்தில் இருந்த சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் முடிவிலே எனக்கு குடல் நுனி வீக்கம் உள்ளது என்றும், எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறிவிட்டனர். ஆனால் என்னுடைய பக்கவாட்டில் எனக்கு வலியே இல்லாதபடியால், என்னால் அதை நம்ப முடியவில்லை. மருத்துவர்களோ எனக்கு அறுவை சிகிச்சை செய்யும்வரை அவர்களால் எனக்கு எதுவுமே செய்ய இயலாது என்று கூறினர். முடிவாக நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன், ஆனால் நான் அறுவை சிகிச்சை செய்வதை கவனிக்கும்படி எனக்கு மயக்கமில்லாமல் வலியின்றி மரத்துப்போகச் செய்யும் சாதாரண மருந்தினை அவர்கள் பயன்படுத்தும்படி வலியுறுத்திக் கூறினேன்.
ஓ, தேவனை அறிந்த யாராவது ஒருவர் என்னருகில் நிற்க வேண்டுமென்று நான் விரும்பினேன். நான் ஜெபத்தில் விசுவாசங்கொண்டிருந்தேன், ஆயினும் என்னால் ஜெபிக்க முடியவில்லை. ஆகையால் முதல் பாப்டிஸ்டு சபையிலிருந்து வந்த ஊழியக்காரர் என்னோடு கூட அறுவை சிகிச்சை அறைக்கு வந்தார்.
அப்பொழுது அவர்கள் என்னை மேஜையிலிருந்து எடுத்து, என்னுடைய படுக்கையில் கிடத்தினபோது, நான் பலவீனமாகிக் கொண்டேயிருந்ததை உணர்ந்தேன். என்னுடைய இருதயத்துடிப்போ குறைந்துகொண்டேயிருந்தது. அப்பொழுது என் மீது மரணம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய சுவாசமும் குறைந்துகொண்டே போனது. அப்பொழுது நான் பாதையின் முடிவை அடைந்துவிட்டேன் என்பதை அறிந்துகொண்டேன், ஓ, நண்பனே, நீ அந்நிலையை ஒருமுறை அடையும்வரை காத்திரு. அப்பொழுது நீ செய்திருக்கிற ஏராளமானக் காரியங்களைக் குறித்து சிந்திப்பாய். நான் ஒருபோதும் அசுத்தமான பழக்கவழக்கங்களை உடையவனாயிருந்ததில்லை. ஆனால் என் தேவனை சந்திக்க நான் ஆயத்தமாயிருக்கவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன்.
என் நண்பனே, நீ குளிர்ந்துபோன சம்பிரதாயமான சபையின் ஒரு அங்கத்தினனாய் மாத்திரம் இருந்தால், நீங்கள் அந்த முடிவை அடையும்போது, நீங்கள் ஆயத்தமாயில்லை என்பதை அப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆகையால் என் தேவனைக் குறித்து நீங்கள் அறிந்துள்ளது அவ்வளவுதான் என்றால், நீங்கள் இங்கேயே முழங்காற்படியிட்டு, யோவான் 3-ம் அதிகாரத்தில் அவர் நிக்கொதேமுவிடம் கூறினதுபோல, மறுபடியும் பிறக்கும் அனுபவத்தை இயேசுவானாவர் உங்களுக்குத் தரும்படி வேண்டிக்கொள்ளுங்கள், அப்பொழுது ஓ, எப்படியாய் சந்தோஷ மணிகள் ஒலிக்கும். அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.