கடைசி நாட்களில் ஒரு தீர்க்கதரிசியைக் குறித்த வாக்குத்தத்தம்



பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள கடைசி வார்த்தைகளே இந்த வாக்குத்தத்தை அளிக்கின்றன; “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.” (மல்கியா 4:5-6)

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் இன்னும் வர வேண்டியதாயுள்ளது. ஆகையால் நாம் அந்த எலியா தீர்க்கதரிசிக்காக உத்தமமாக எதிர்நோக்கியிருக்க வேண்டும். வேதத்தில் தீர்க்கதரிசிகள் செல்வாக்கு படைத்த மார்க்கரீதியான ஸ்தாபனங்களுக்கு வந்ததில்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடத்திற்கே வந்தனர். மல்கியா 4-ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசி வந்திருந்தால், அவர் தவறவிடப்பட்டாரா என்று யூகித்துப்பாருங்கள். அவர் பண்டைய தீர்க்கதரிசிகளைப்போல இருப்பாரேயானால், சொற்ப ஜனங்கள் மாத்திரமே அவரை அடையாளங்கண்டு கொண்டால் என்னவாகும்? இந்த தீர்க்கதரிசி கடைசி நாளில் திரும்பி வருவாரேயானால், நாம் அவரை எப்படி அறிந்துகொள்வோம்? பதிலோ வேதவாக்கியங்களில் தெளிவாகக் காணப்படுகிறது. அவர் ஒரு தீர்க்கதரிசியின் சுபாவத்தை உடையவராயிருப்பார். அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வார். அவர் அற்புதங்களை நிகழ்த்துவார். மார்க்க ரீதியான ஸ்தாபனங்கள் அவருக்கு மதிப்பின்மையைக் கொண்டுவர முயற்சிக்கும். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிலர் அவரை அந்நாளுக்கான வாக்களிக்கப்பட்ட செய்தியாளராக அடையாளங்கண்டுகொள்வர்.

எலியா திரும்பி வரும்போது, எப்படி நாம் அவரை அறிந்து கொள்வோம்? நாம் அவரை அடையாளங்கண்டுகொள்ளும்படியாக என்ன குணாதிசயங்களை அவர் காட்டுவார்?

எலியா ஒரு வனாந்திர மனிதனாயிருந்தார். மகத்தான அடையாளங்களும், அதிசயங்களும் அவருடைய ஊழியத்தை பின்தொடர்ந்தன. அவன் தன்னுடைய நாளின் பொல்லாங்குகளுக்கெதிராக பிரசங்கித்தான். அவன் விசேஷமாக யேசபேல் ராணியின் ஒழுக்கமற்ற கற்பின்மைக்கு எதிராக பிரசங்கித்தான். எலியா அக்கினி ரதத்தில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவனுடைய ஆவி எலிசாவின் மேல் விழுந்தது. அப்பொழுது மகத்தான அடையாளங்களும், அதிசயங்களும் எலிசாவினுடைய ஊழியத்தை அடையாளங்காட்டின. அவனும்கூட உலகத்தின் பாவங்களுக்கு எதிராகப் பிரசங்கித்தான். இவ்விரு தீர்க்கதரிசிகளுமே தங்களுடைய நாளின் மார்க்க சம்பந்தமான ஸ்தாபனங்களுக்கு தனியாக எதிர்த்து நின்றனர். நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்னர் அதே ஆவியானது இப்பூமிக்கு யோவான்ஸ்நானனுக்குள் திரும்பி வந்தது. ஆண்டவரை அறிமுகப்படுத்த எலியா திரும்பவும் வருவார் என்று மல்கியா தீர்க்கதரிசி முன்னுரைத்திருந்தார்: “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப்போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்;” (மல்கியா 3:1). யோவான்ஸ்நானன் தேவனுடைய பிள்ளைகளை மனந்திரும்புதலுக்காக அழைத்தபோது, அவன் அந்த ஸ்தானத்திற்கு உண்மையாயிருந்தான். அவன் எலியாவைப் போன்றே ராஜாவுக்கும் நவீன மார்க்க சம்மந்தமான ஸ்தாபனங்களுக்கும் எதிராக பிரசங்கித்தான். மல்கியா 3-ல் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசி யோவான்ஸ்நானன் என்பதை கர்த்தராகிய இயேசு மத்தேயு 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் உறுதிபடுத்தினார். “அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.” லூக்கா 1:17 யோவான்ஸ்நானன் எலியாவின் ஆவியை உடையவனாயிருக்க வேண்டும் என்றும், அவன் அவருக்கு முன்பாகப் போய், எலியாவின் ஆவியும், பலமும் உடையவனாய் பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கு திருப்புவான் என்றும் கூறுகிறது. ஆனால் மல்கியா 4-ம் அதிகாரத்தின் இரண்டாம் பாகம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை கவனியுங்கள்… நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, …பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். அந்த வேதவசனத்தின் பாகம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக நிறைவேறும்.

யோவான்ஸ்நானனுக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து, இது மீண்டும் எலியாவின் ஆவி பூமிக்கு திரும்புவதற்கான நேரமாயுள்ளது.

அந்த நாள் வந்துள்ளதே! இந்தக் காலத்தில் எலியாவின் ஆவி திரும்பி வந்துள்ளதை நாம் கண்டிருக்கிறோம். அவர் நவீன ஸ்தாபன முறைமைகளை எதிர்த்தார். அவர் உலகத்தின் பாவங்களுக்கு எதிராக நின்றார். அவர் கணக்கற்ற அடையாளங்களையும், அதிசயங்களையும் காட்டினார். அவர் வேதத்தில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் வார்த்தைக்கு வார்த்தை பிரசங்கித்தார். வாக்குரைக்கப்பட்டபடியே மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட தீர்க்கதரிசி வந்தார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வந்தார். அந்த தீர்க்கதரிசியினுடைய பெயர்தான் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்பதாகும். நாங்கள் அவரை, “சகோதரன் பிரான்ஹாம்” என்றே அழைக்கிறோம்.

“நான் நேசித்த வில்லியம் பிரான்ஹாம் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்றே நான் விசுவாசிக்கிறேன்.”

ஓரல் ராபட்ஸ், உலக புகழ்பெற்ற சுவிசேஷகர் மற்றும் ஓரல் ராபட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்.

“வில்லியம் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசியாக நம்முடைய வழியில் தோன்றி, சுவிசேஷகங்களில் நமக்கு காட்டப்பட்ட அதேக் காரியங்களை இந்த இருபதாம் நூற்றாண்டில் துல்லியமாக நமக்குக் காட்டினார்… தேவன் தம்முடைய ஜனங்களை சந்தித்துள்ளார், ஏனென்றால் ஒரு மகத்தான தீர்க்கதரிசி நமக்கு மத்தியிலே எழும்பியுள்ளார்.”

Dr. T.L. ஆஸ்பர்ன், பெந்தேகோஸ்தே சுவிசேஷகர் மற்றும் திறம்பட எழுதவும் செயலாற்றவுங் கூடிய பண்பு நலன்கள் நிரம்பப் பெற்ற ஆக்கியோன்.

“ஒரு நபருக்காக ஜெபிக்கும் முன்னர், அவர் அந்த நபருடைய வியாதிகளைக் குறித்த சரியான விபரங்களையும், அவர்களுடைய ஜீவியங்களைக் குறித்தும், அவர்களுடைய சொந்த ஊரைக் குறித்தும், அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்தும், செயல்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய குழந்தைப்பருவ நாட்களைக் குறித்தும் சரியான விபரங்களைக் கூறுவார். நான் சகோதரன் பிரான்ஹாம் அவர்களோடிருந்த இத்தனை வருடங்களிலும் ஒருமுறை கூட பிழையாக அந்த வார்த்தைகளை அவர் கூறினதேயில்லை. நான் பார்த்த காரியங்களே ஆயிரக்கணக்காணவைகளாயிருக்கின்றன.”

ஈயர்ன் பாக்ஸ்டர், சுவிசேஷகர், ஏழு வருட காலமாக பிரான்ஹாம் அவர்களின் தொடர்கூட்ட முகாம்களுக்கு மேலாளர் மற்றும் புதிய சபை இயக்கத்தின் பிரிட்டன் மூல தலைவர்களில் ஒருவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் சஞ்சரித்தது முதற்கொண்டே எந்த ஒரு மனிதனும் இதுபோன்று அளவுகடந்த கணக்கில்லா கிரியைகளை செய்ததேயில்லை. கென்டக்கி மலையில் உள்ள ஒரு சிறு அறைகொண்ட மரக்குடிலில் தாழ்மையாய் ஆரம்பமானதிலிருந்து டெக்ஸாஸில் உள்ள அமரிலோ என்ற இடத்தில் கர்த்தர் அவரை பரம வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும்வரையில் அவருடைய ஜீவியம் தொடர்ந்து இயற்கைக்கு மேம்பட்ட நிகழ்வுகளால் அடையாளங்காட்டப்பட்டன. 1946-ல் கர்த்தருடைய தூதனின் கட்டளைப்படி சகோதரன் பிரான்ஹாம் அவர்களுடைய ஊழியமானது தீப்பொறியாய் எழும்பி அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் ஒரு மகத்தான சுகமளிக்கும் எழுப்புதல்களை தோற்றுவிக்கும்படியான தீப்பிழம்பாக கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த நாளில் அவர் 1950-ம் ஆண்டு தொடங்கி அதற்கடுத்த தொடர்ச்சியான வருடங்களில் பெந்தேகோஸ்தே சபையை மறுரூபமடையச் செய்த சுகமளிக்கும் எழுப்புதலில் “தந்தையாகவும்” மற்றும் “முன்னோடியாகவும்” முடிவாக தெய்வீக ஆவியின் ஏவுதலினால் கவர்ந்திழுக்கப்பட்ட கிறிஸ்தவ இயக்கம் எழும்ப காரணமானது என்றும், அதுவே இன்றைய ஒவ்வொரு பிராட்டஸ்டென்ட் ஸ்தாபனத்திற்கும் கிட்டத்தட்ட நன்மதிப்பை அளிக்கிறது என்றும் கிறிஸ்தவ சரித்திரக்காரர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆயினும் ஸ்தாபனங்கள் சம்பிரதாய முறைமைக்கு உண்மையாயிருந்து கொண்டு அவருடைய உபதேசங்களை புறக்கணித்து, அவருடைய மகத்தான ஊழியப் பணியினை மறுதலிக்கின்றன.

சகோதரன் பிரான்ஹாம் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவர் இந்த சந்த்திக்கு தீர்க்கதரிசி என்று தேவன் நிரூபித்தார். கர்த்தர் யோபுவினிடத்தில் பேசினது போன்றே, இவரிடத்தில் ஒரு சுழல்காற்றில் பேசினார். மோசேயைப் போன்றே அக்கினி ஸ்தம்பம் அவரை வழிநடத்துவதைக் கண்டார். மிகாயாவைப் போன்றே, இவர் குருமார்களால் வசைபாடப்பட்டார். எலியாவைப் போன்றே, இவர் வனாந்திர மனிதனாயிருந்தார். எரேமியாவைப் போன்றே, இவர் தூதனால் கட்டளையிடப்பட்டார். தானியேலைப் போன்றே இவர் எதிர்கால தரிசனங்களைக் கண்டனர். கர்த்தராகிய இயேசுவைப்போன்றே, இவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருந்தார். பவுலைப் போலவே, இவர் வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார்.

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியின் மூலமாக மீண்டும் தம்முடைய ஜனங்களை சந்தித்துள்ளார். சரித்திரத்தின் அந்தகார நேரத்தில் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத அளவில் நீதிநெறி மூழ்கியிருக்கையில், தொடுவானமும் மிகப்பெரிய அழிவின் ஆயுதங்களால் மங்கலாய்த் தோன்றியிருக்கையில், மரித்துக்கொண்டிருக்கிற இனத்தை மனந்திரும்புதலுக்கு அழைக்க தேவனுடைய சமூகத்திலிருந்து ஒரு தாழ்மையான மனிதனாய் அனுப்பப்பட்டார்.

கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பிரியமான சீஷனாகிய யோவான் இவ்வாறு எழுதினான்:

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)

அதேவிதமாக சகோதரன் பிரான்ஹாமின் ஜீவியத்தைக் குறித்தும் கூற முடியும். இந்த தீரமான மனிதனின் ஜீவியத்தைக் குறித்த ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கொண்ட ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகள் 1200-க்கும் மேற்பட்டவைகளாயிருக்கின்றன. இன்னமும் இலட்சக்கணக்கான ஜனங்களின் வாழ்க்கையிலிருந்து இந்த மனிதனுடைய வல்லமையான கிரியைகளின் மூலம் நாங்கள் புதிதான சாட்சிகளை தொடர்ந்து கேட்கிறோம். இந்தச் சிறு புத்தகத்தின் மூலம் இந்த தேவ மனிதனின் அதிவேக கிரியைகளின் மேலோட்டத்தைக் கூட ஒருபோதும் எழுதிட முடியாது.