யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
மாற்கு 16:17-18
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
நாம் எல்லோருமே வேதாகமத்தின் பக்கங்களைத் திருப்பி, தேவன் அற்புதங்களை செய்கிறார் என்பதைக் காணமுடியும்: மோசே சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தார், எலியா ஒரு பஞ்சத்தை வருவித்தான், இயேசு ஜலத்தின் மேல் நடந்தார், சீஷர்கள் வியாதியஸ்தரை சுகப்படுத்தினர்.
ஆயிரக்கணக்கான அற்புத நிகழ்ச்சிகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தேவன் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் சாட்சிப் பகருவாரேயானால், அப்பொழுது இன்றைக்கு அவருடைய அற்புதங்கள் எங்கே? அவர் வேதத்தில் குஷ்டரோகத்தை சுகப்படுத்தினதுபோன்று புற்றுநோயை அவரால் சுகப்படுத்த முடியுமா? பால்வினை நோய்கள் (AIDS) அல்லது குளிர் காய்ச்சலைக் (Malaria) குறித்து என்ன? அவரால் இன்னமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடியுமா? ஆம், தேவன் இன்னமும் அற்புதங்களை நிகழ்த்துகிறார். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடர்கின்றன.
இப்பொழுது, நண்பர்களே பாருங்கள், இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னனைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். நாம் அவருக்காக ஜெபித்தபோது, அவர் உடலில் பல திசுக்கள் இறுகிபோயிருந்த நோயிலிருந்து சுகமாக்கப்பட்டார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலைக் குறித்து நினைத்துப் பாருங்கள், (அவளுடைய பாட்டி செஞ்சிலுவை சங்கத்தினை நிறுவியவர்) அவள் ஏறக்குறைய அறுபதே பவுண்டு எடையோடு வயிற்றின் முன்சிறுகுடல் புற்று நோயினால் படுக்கையாய்க் கிடந்து மரித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு சிறு புறா அங்குள்ள புதருக்குள்ளாக பறந்து செல்ல, தேவ ஆவியானவர் வந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் பிழைப்பாள்” என்றுரைத்தார், அவள் நூற்றைம்பத்தைந்து பவுண்டுகள் எடைகொண்டவளாய் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறாள்.
வருடக்கணக்கில், அறுபத்தாறு வருடங்களாக சக்கர நாற்காலியிலும், படுக்கையிலும் இருந்த காங்கிரஸ்காரர் உப்ஷா அவர்களைக் குறித்து நினைத்துப் பாருங்கள். ஒரு கணப்பொழுதில் தன்னுடைய காலூன்றி எழும்பி, தரையைத் தொட்டு, இயல்பான நிலைக்குள்ளாகி பரிபூரண குணமடைந்தார்.
குணமாக்கப்பட்டிருக்கிற கோடிக்கணக்கான ஜனங்களைக் குறித்து நினைத்துப்பாருங்கள். எனவே நாம் மரிக்கும்வரை இங்கேயே ஏன் அமர்ந்திருக்க வேண்டும்? அதைக் குறித்தான ஒரு காரியத்தை நாம் செய்வோமாக.
நீங்கள் சுகவீனமாயிருந்தால் அல்லது தேவையுள்ளவர்களாயிருந்தால் விசுவாசமுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவரால் ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடிந்ததனால், இப்பொழுது அவரால் அதே அற்புதத்தை நிகழ்த்த முடியும். நாம் குணமாக்கப்பட்டிருக்கிறோம் என்றே அவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். நாம் மாத்திரம் விசுவாசிப்போமேயானால் நலாமாயிருக்குமே.
வில்லியம் D உப்ஷா
வில்லியம் D உப்ஷா அவர்கள் ஐக்கிய நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் குழுவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றி, 1932-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஒரு சிறு குழந்தையாயிருந்தபோது ஒரு விவசாய நிலத்தில் உண்டான விபத்தினால் அவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டு, 66 ஆண்டுகளாக அவர் கக்கத்தண்டுகளினாலோ அல்லது ஒரு சக்கர நாற்காலியிலோ காலத்தை கழித்தார். ஆனால் 1951-ம் ஆண்டில் பூரண குணமடைந்து எஞ்சியுள்ள தன்னுடைய வாழ்நாட்களில் பரிபூரணமாய் நடந்தார்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
புகழ்பெற்ற மருத்துவச்சியின் தூரத்து சொந்தக்காரியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வயிற்றுப் பகுதி முழுவதும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்றார். அந்த புற்றுநோய் அவளுடைய உயிரை பறித்துக்கொள்வதற்கு முன்னர் ஜெபிக்கும்படியான தன்னுடைய கடைசி மன்றாட்டோடு இந்தப் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தாள். 1950-ம் ஆண்டு கர்த்தராகிய இயேசு அவளை சுகப்படுத்துவதற்கு முன்பு அவள் மரணத்தின் விளிம்பில் இருந்ததை உங்களால் காண முடியும். அவளுடைய சுகமளித்தலுக்குப் பின்னர் அடுத்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு, தேவன் இன்னமும் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார் என்பதற்கு ஒரு சாட்சியாக அனுப்பினார்.
டிரிஸ் கிரிஃபின்
டிரிஸ் கிரிஃபின் 2013-ம் ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய முதுகு வலியின் காரணமாக மருத்துவரின் அலுவலகத்திற்கு சென்றாள். மேலும் புற்று நோயுடன் அவளுக்கிருந்த போராட்டம் மீண்டும் நிகழக்கூடுமா என்று அவள் பயமுற்றிருந்தாள். அப்பொழுது MRI என்ற மருத்துவப் பரிசோதனை நிழற்படம் அவளுடைய இருதயத்தில் உள்ளே “பெருந்தமனிப் பிளவு ஏற்பட்டுள்ளது” என்பதைக் காண்பிக்க, அது மருத்துவர்களை கூடுதலான பரிசோதனைகளைச் செய்யும்படி செய்து, அடுத்த நாள் அவசர அறுவைச் சிகிச்சையை ஏற்பாடு செய்துவிட்டது. அந்த இருதய நிழற்படத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வெளிப்படையான துவாரங்கள் மேலும் பிளவுறுமேயானால் நிச்சயமாகவே உடனடியாக மரணம் நேரிடும் என்பதையே பொருட்படுத்தினது.
அதற்கு அடுத்த நாள் விசுவாசிகள் அவளுக்காக ஜெபித்தப் பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன் சரியாக அந்த துவாரப் பகுதியைக் கண்டறிய மற்றொரு CT Scan என்ற பரிசோதனை நிழற்படத்தை எடுத்தனர். இம்முறையோ அந்த நிழற்படத்தில் பரிபூரண ஆரோக்கியமான இருதயமே காட்டப்பட்டது. எனவே மருத்துவர் குழப்பமுற்று, திருமதி. கிரிப்பின் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. உங்களுக்கு பெருந்தமனி பிளவு இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த ஆதாரம் மறைந்துபோய்விட்டது” என்று கூறிவிட்டார். மேலும் அவர் ஜெபத்திற்கு முன்னால் எடுத்த படங்களைக் காண்பித்துவிட்டு, அதற்குப் பின்னர், “நீங்கள் அறுவை சிகிச்சையில்லாமலேயே போகலாம், ஏனெனில் புற்றுநோயின் அடையாளமே இல்லை. நீங்கள் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டார்.
மருத்துவருடைய அம்புக் குறியீடு அந்தப் பெருந்தமனியைக் காண்பித்துக்கொண்டிருக்கிறது. அது அந்தப் படத்தின் மையத்தில் கருப்பாக உள்ளது. எதிர்கோணங்களைச் சேர்க்கும் வரிசையினூடாக உள்ள அந்த இரத்தக் குழாயின் நெளிவு அல்லது பெருந்தமனியின் பிளவிற்கு உடனடியான அறுவை சிகிச்சைத் தேவைப்பட்டது. மேலும் அந்தப் பிளவு தகர்வுறுமேயானால், அது அபாயகரமாயிருக்கும். (மேலே காணப்படுகிறது) அதற்கு அடுத்த நாள் எடுக்கப்பட்ட இரண்டாம் நிழற்படமாகும். அதில் அந்தப் பிளவு முற்றிலும் மறைந்து ஒருபோதும் காணப்படவேயில்லை.
சான்றாதாரங்கள்
சங்கீதம் 103:2-3
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
லூக்கா 17:6
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
1 தெசலோனிக்கேயர் 1:5
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
எபிரெயர் 2:3-4
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்.
எபிரெயர் 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
யாக்கோபு 5:15
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.